Wednesday, February 27, 2008

தினமணி வரலாற்றைப் புரட்டுகிறதா? தெரியாமல் செய்கிறதா?

தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெரும் நாள் 4-4-1929. அதுவரை காலம் தீண்டாமை என்ற சமூகக் கொடுமைக்கு உள்ளாகி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று வழிபட வைத்த நாள். குத்தூசி சா.குருசாமி, மாயவரம் சி.நடராசன், பூவாளூர் பொன்னம்பலனார், திருச்சி ராவணதாஸ் தலைமையில் தீண்டாமை என்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தொடக்கமாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஈரோடு ஈஸ்வரன் கோயிலுக்குள் நுழைந்தனர். பதறிப்போன வைதீகர்கள்-கோயில் குருக்கள்மார் உட்பட அனைவரும்-கோயிலை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்ற தீண்டாமைக் கற்பிதங்களை எல்லாம் தூசியென ஊதிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தவர்களை, உள்ளேயே வைத்து கோயிலைப் பூட்டியும் விட்டனர். மூன்று நாட்கள் போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். அவர்களுக்கான உணவுகளை கோயில் மதில் சுவர் வழியாக ஈ.வெ.ரா.பெரியாரின் மனைவி நாகம்மையார் கொடுத்து உதவினார். அன்றைக்கு இந்தக் கோயிலின் தர்மகர்த்தாக்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.ரா.பெரியார் கேரளா சென்றிருந்தவர் ஈரோடு திரும்பினார். மூன்று நாட்களாக கோயிலுக்குள் அடைபட்டுக் கிடப்பதைக் கேள்விப்பட்டார். பதறினார்.கோயில் சாவியைக் கொண்டுவரச் செய்து திறந்து விட்டார். காவல் துறை அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்தியது. வழக்கும் நடந்தது. (வழக்கு எண் 36/29, 6-4-1929). தீண்டத்தகாதார் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயிலே தீட்டாகி விட்டது என நீதிமன்றம் ரூ.60 அபராதம் விதித்தது. இந்தச் செய்திகள் அன்றைய இதழ்களில் விரிவாக வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டும் இருக்கிறது. அதற்கான சான்றுகளும் உள்ளன.இந்த ஈ.ரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுப் போராட்டம் நடந்தது 4-4-1929. இதற்கு சரியாகப் பத்தாண்டுகள் கழித்து 8-7-1939 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலினுள், வைத்தியநாதய்யர் தலைமையில், முத்துராமலிங்கத் தேவர் முன்னிலையில் கோயில் நுழைவுப் போராட்டம் நடந்தது. இப்பொழுது சொல்லுங்கள் எது முதல் கோயில் நுழைவுப் போராட்டம்? எதற்காகப் பத்தாண்டுகள் கழித்து நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 'பிரவேசத்தை' 'தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது' என 8-7-2007 அன்றைய தினமணியில் கட்டுரை வெளியிட வேண்டும்? இத்தவறை சுட்டிக்காட்டி அனுப்பிய கடிதங்களையும் வெளியிடாமல் மறைத்தது ஏன்?ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுப் போராட்ட வழக்கு விசாரணையின் போது வைக்கம் போராட்டத்தை நடத்தியவர்களில் ஒருவரும் காந்தியடிகளின் நண்பருமான பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், பாரிஸ்டர் ஏ.கே.சுப்பிரமணியம் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் அன்றைக்குப் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. அன்றைய நாளிதழ்களில் வெளிவந்தும் உள்ளது. அவற்றில் சில...
வழக்குப் போட்ட காவல் துறை சார்பாக ஈரோடு ஈஸ்வரன் கோயிலில் பணியாற்றிய முத்துசாமி குருக்கள் அளித்த சாட்சியம் வருமாறு:-
கேள்வி : ஏன் கோயில் அசுத்தப்பட்டது? பதில் : தீண்டாதவர்கள் வந்ததினால்!
கேள்வி : பஞ்சமர்கள் கோயிலுக்குள் வரக்கூடாதென்று எந்த ஆகமத்தில் கூறி இருக்கிறது? பதில் : காமிக ஆகமத்தில்!
இந்தப் போராட்டத்தின் போது கோயிலில் இருந்த கோபிசெட்டிபாளையம் தெய்வசிகாமணி அளித்த சாட்சியம்.....
கேள்வி: மீறிச் சென்றால் என்ன செய்ய வேண்டும்?பதில்: ஆகமப்படி சம்றோஷனை செய்ய வேண்டும்.
கேள்வி: மண்டபங்களில் என்று கூறினீர்களே அதில் யார் யார் எதுவரை போகவேண்டும்?பதில்: வேதாகாம சாஸ்திரம் படித்து தீட்ஷை பெற்ற சைவ பிராமணர்கள் கர்ப்பகிரகத்திற்கு அடுத்த அர்த்த மண்டபம்வரை போகலாம். தீட்ஷை பெறாத பிராமணர்கள் மகாமண்டபத்திலிருந்து சுவாமியைத் தரிசிக்கலாம். . சூத்திரர்கள், சத்திரியர்கள் எல்லாம், வைசியர்களுக்குக்குப் பின்னால் நின்று தரிசிக்க வேண்டும். புத்தமதக்காரர், பவுத்தர், குரோதர் ஆகிய பிற மதக்காரர்கள், நான்காவது பிரகாரத்தில் நின்று தரிசிக்க வேண்டும்.
கேள்வி: தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குப் போக உரிமை கிடையாதவர்கள் என்றால் அவர்கள் எதுவரை போகலாம்?பதில்: பள்ளர், பறையர், சக்கிலியர், வள்ளுவர் ஆகிய இந்த தீண்டப்படாத சாதியாரெல்லாம் கோயில் கோபுர வாசலுக்கு வெளியேதான் இருக்கவேண்டும். இவர்களெல்லாம் ஸ்தூபி என்னும் கோபுர சிகரத்தை (விமானத்திலுள்ள தங்கக் கலசத்தை) மட்டும் பார்த்து தரிசிக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கோயில் நுழைவுப் போராட்டக்காரர்களை கைது செய்தவர்களில் ஒருவரான தலைமைக் காவலர்(எட்கான்ஸ்டபிள்) பாலகிருஷ்ணன் அளித்த சாட்சியம்...
கேள்வி: குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவிர மற்றவர்களின் பெயர்கள் தெரியுமா? வெளியூர் நபர் யாராவது உண்டா? பதில்: (குத்தூசி) எஸ்.குருசாமி, மாயவரம் சி.நடராசன், பூவாளூர் அ.பொன்னம்பலனார், திருச்சி ராவணதாஸ் மற்றும் சிலர்.
கேள்வி: அவர்களை எப்படித் தெரியும்?பதில்: ஈரோடு மீட்டிங்கிற்கு அடிக்கடி வருவதுண்டு!கேள்வி : சர்க்கில் இன்ஸ்பெக்டர் பிராமணரா?பதில் : ஆம்!
மேலும் வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் தீண்டத்தகாதார் கோயிலுக்குள் சென்றதால், கோயில் தீட்டுப் பட்டு விட்டது என்று கூறி ரூ.60 அபராதம் விதித்தார். சுயமரியாதை இயக்கத்தினர் மேல் முறையீடு செய்தனர். அங்கும் கீழ் நீதிமன்றத்தின் கருத்துகளையே உறுதிப்படுத்தியதோடு, அபராதத் தொகையை மட்டும் ரூ.30 ஆகக் குறைத்தனர். சுயமரியாதை இயக்கத்தினரும் இத்தோடு விடவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கும் விசாரணைக்கு வந்தது. இறுதியில் வழக்கு தள்ளுபடி ஆனது. அபராதமும் கிடையாது.
உண்மை இவ்வாறிருக்க தினமணி திரும்பத் திரும்ப வைத்திய நாதய்யர் தலைமையில் நடந்த கோயில் நுழைவையே தீண்டத்தகாதாரின் முதல் கோயில் நுழைவு எனக் குறிப்பிடுவது திட்டமிட்டுச் செய்வதாகவே இருக்கிறது. இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1) இதேபோன்ற கட்டுரை ஒன்று ஐந்தாண்டுகளுக்கு முன் வெளியாகி கழஞ்சூர் செல்வராஜி போன்ற திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட செய்தியும் வெளிவந்துள்ளது. திரும்பவும் அதே கருத்தை வெளியிடுவது உள்நோக்கத்துடனேயே இருக்க முடியும்.2) வைதீக-இந்துத்துவ மரபானது எப்படி சாதிய, தீண்டாமைக் கொடுமைக்கு மூல வேராக இருக்கிறது என்பதை ஈரோடு கோயில் நுழைவு மிகத் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கிறது. இவ்வரலாற்றை நினைவுபடுத்தி மேலும் அம்பலப்பட்டுக் கொள்ள வேண்டுமா? என்று நினைத்து வரலாற்றை புரட்ட முயற்சிக்கிறது தினமணி. இச்செயல் உண்மைக்குப் புறம்பானது. இதழியல் நெறிமுறைகளுக்கு எதிரானது.