Wednesday, April 16, 2008

சமூகப் பிளவுகளை, பிணக்குகளைக் களையக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக்கல்வியே

கற்றல் என்பது மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் நடக்கும் தொடர் நிகழ்வாகும். மனிதன் பிறந்தது முதல் கல்லறைக்குச் செல்லும் வரை நடக்கும் தொடர் ஓட்டமே கல்வி. இருப்பினும், கல்வியாளர்களின் கருத்துப்படி, மரபு வழியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விழுமியங்கள், நெறிமுறைகள், திறன்கள் அறிவுச் செல்வங்கள் ஆகியவற்றை, சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வதையே கல்வி என்கின்றனர்.
இத்தகைய கல்வியை அளிப்பதற்காக இந்திய சமுதாயத்தால் ஏற்பிசைவு அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில், அடிப்படைக் கல்வி அளிக்கும் நிறுவனங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
அரசுப் பள்ளிகள்
மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள்
கேந்திரிய வித்யாலயாக்கள்
மத்திய அரசுப் பள்ளிகள்
இவற்றுக்கிடையே பயிற்று முறை, பயிற்று மொழி போன்ற வேறுபாடுகள் பல இருந்தாலும் அடிப்படையில் இவற்றை வேறுபடுத்துவது பயிற்று மொழியே.
மத்திய அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள் இந்தி மொழி வழியிலான விழுமியங்கள், மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தியும், மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகள் ஆங்கில மொழி வழியிலான மதிப்பீடுகள், விழுமியங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன. (இதனால் தான் குடிக்கும் தண்ணீருக்குத் திண்டாடும் நம்நாட்டில், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் ரைன் ரைன் கோஅவே படித்துக் கொண்டிருக்கின்றன.)
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் தமிழ்வழிக் கல்வியில் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதன் ஊடேயே ஒரு ஆங்கில மொழிப் பாடத்தையும் கற்பிக்கிறது.
அனைத்து தனியார் பள்ளிகளும் ஆங்கில வழிக் கல்வி என்பதே பெரு வழக்காக கொண்டுள்ளன. சிற்றூர்களைக்கூட இந்த நர்சரிப் பள்ளிகள் விட்டு வைக்கவில்லை. தமிழ்ச் சமூகம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள மிகக் கடினமாக முயன்றுகொண்டிருக்கிறது. கடினமாக என்று சொல்வதற்குக் காரணம், ஆங்கிலம் ஒரு மொழி, அந்த மொழியை கற்றுக்கொள்வது என்ற எல்லையையும் தாண்டி, அம்மொழி வழி பல்வேறு துறை அறிவையும் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் தான். அதுவும் அம்மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிகளின் வழியாக.
தமிழ்ச் சமூகமே தன்னுடைய தாய்மொழி வழிக் கல்வியை புறக்கணித்துவிட்டு இவ்வாறு செல்ல முயற்சிப்பதற்குக் காரணம் என்ன?
இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு மொழிப் பற்றில்லை, மொழி உணர்வு இல்லை என்று சொல்வது பொருத்தமான பதிலாக இருக்க முடியாது.
எந்தப் பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் யோசிப்பர். அப்படி யோசிக்கும் பொழுது அவர்களுக்குப் பிரகாசமாகத் தெரிகின்ற மெட்ரிகுலேசன்-நர்சரிப் பள்ளிகளையே, அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆங்கில தெரிந்தால் வழக்கறிஞனாகி வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். வழக்குமன்றத்தில் வழக்காடலாம்.
ஆங்கிலம் தெரிந்தால் மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவிகளில் அமரலாம்.
ஆங்கிலம் தெரிந்தால் மருத்துவ பட்டப்படிப்பை முடித்து, மருத்துவராகி செல்வச் செழிப்போடு சிறக்கலாம்.
ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால், பன்னாட்டு நிறுவனங்கள் தேடி வந்து வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அழைத்துச் செல்கின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சமூத்தில் மேல்தட்டு- உயர்வாழ்க்கை என்பது ஆங்கிலம் சார்ந்ததாக அமைக்கப் பட்டிருக்கிறது. உடல் உழைப்பைச் சாராத, சமூகத்தின் அதிகாரம் செலுத்தும் இடத்திற்குச் செல்லுவதற்கான கடவுச் சீட்டாக ஆங்கிலம் இருப்பதால், தாய்மொழி வழிக் கல்வியை எதிரானதாகக் கருதுகின்றனர்.
அண்மையில் சென்னைக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டான். (டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் வெளிவந்துள்ளது). தன்னால் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசமுடியவில்லை. படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டிருக்கிறான் அந்த மாணவன்.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களில் 90 விழுக்காட்டி னர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாததால், படிப்பைத் தொடராமல் நிறுத்திவிடுகின்றனர்.
ஒரு மொழியை கற்றுக்கொள்ளுவதற்கும், அந்த மொழி வழி ஒரு துறை அறிவைப் பெறுவதற்கும் அதாவது பயிற்றுமொழியாகவே அம்மொழி இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
நாம் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள முயற்சிப்பதைவிட, அம்மொழி வழியாக பல்வேறு துறை அறிவைப் பெற முயற்சித்துப் பரிதவித்து நிற்கிறோம்.
ஆங்கிலம் படித்துவிட்டால் சிறப்பான எதிர்காலத்திற்கான விசா கிடைத்துவிட்டதாக இந்த சமூக மனம் கருத வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் மொழிக் கொள்கைகள், பல்வேறு வல்லுநர்களின் பரிந்துரைகள் எல்லாம் அந்த விசாவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இதனால் உழவுத் தொழில் உள்பட இந்த சமூகத்தின் வாழ்வோடு பிணைந்துள்ளவை அனைத்தும் புறக்கணிப்பட்டு, புறந்தள்ளப்பட்டு வருகின்றன. அவற்றையும், அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களையும் கீழானவர்களாகக் கருதும் மனப்பான்மையும் வளர்ந்து நிற்கிறது.
ஆங்கிலம் தெரிந்தவன் அரசோடும் அதிகாரத்தோடும் எளிதாகத் தொடர்பு கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இத்தகைய கொள்கைகளால், செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகம் பிளவுண்டு நிற்கிறது. இணக்கம் காண முடியாத முரண்பாடு இந்தச் சமூகத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து நிற்கிறது.
இதற்கு நேர்மாறாக, தாய்மொழியில் கற்பவன் நாட்டுப்புறத்தானாக, விவரம் தெரியாதவனாக, முன்னேறுவதற்கு வழியற்றவனாக கருதும் நிலை இந்த சமூகத்தில் உள்ளது. சமூகத்தின் கருதுநிலை மட்டுமல்ல, எதார்த்தமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.
இதற்கு மிக எளிமையான எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்க்கலாம். சென்னை போன்ற நகரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளில் பயணிப்பதற்குக் கூட ஆங்கிலம் தெரியவேண்டிய கட்டாயம் உள்ளது. 18K, 18A, 18G, 18D இந்த நான்கு வழித்தடமும் வெவ்வேறு முனைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளாகும். பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல 18K, பாரிமுனையில் இருந்து தாம்பரம் செல்ல 18A, பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லுவதற்கு 18G. இந்த ஆங்கில எழுத்துகள் தெரியாத, தமிழ் மட்டும் தெரிந்தவன் இந்தப் பேருந்துகளில் பயணிப்பது எவ்வளவு கடினம் என்று எண்ணிப் பாருங்கள். பயணம் செய்வதற்கே இந்தச் சிக்கல் என்றால், உயர் கல்வி முதல் அரசு அலுவலகங்கள் வரைச் செல்வதற்கு எத்தனை தடைகள் இருக்கின்றன.
இதனால்தான் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறி நிற்பதுபோல், தங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் தடுமாறிவிடக் கூடாது என்ற அச்சத்தால், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன் பெற்றோர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இப்படி மொழியின் பேரால், இந்தச் சமூகம் பிளபட்டு நிற்பதற்கு முடிவு கட்டாமல், தமிழர்களால் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாது.
இந்த முரண்பாட்டைக் களைவதற்கான முதற்படி... தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி.
அரசு, அதிகார நிறுவனங்கள் உள்பட அனைத்து வேலைவாய்ப்புகளும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி பெற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆங்கிலம் தெரியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிப்பதில் இருந்து தமிழ்ச் சமூகம் விடுபடமுடியும். மாணவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக, வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கல்வியைக் கற்றவர்களாக தலைநிமிர்ந்து செல்ல முடியும். புதியது புனையும் ஆற்றலைப் பெற முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், சமூகப் பிளவுகளுக்கும் முரண்பாட்டுக்கும் உரிய அடிப்படையை களையக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியே.
இன்றைக்கு கல்வி வியாபாரமாக்கப்பட்டு, அதற்குரிய இலக்கணத்தையே இழந்து நிற்கிறது. ஆங்கில வழியில் பத்து ஆண்டுகள் படித்து முடித்தவனால், ஆங்கிலத்தில் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் தடுமாறும் தத்துப்பிள்ளகளாக அவர்கள் காட்சியளிக் கின்றனர். புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் பெருகி நிற்கும் நர்சரி பள்ளிக்கூடங்கள் இதைத் தான் சாதித்துள்ளன.
பள்ளிக் கல்வி நல்ல வியாபாரப் பொருளாக மாறியிருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக ஏற்றம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு தட்டிக்கழித்து வருகிறது.
இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது தாய்மொழி வழியிலான பொதுக் கல்வி மட்டுமே. கல்வியை வணிகமாக்கி, தங்களைப் வளப்படுத்திக்கொள்வதையும் இக்கல்வி ஒழித்திடும்.
மக்களை, எதிர்காலத் தலைமுறையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய்மொழி வழியிலான பொதுக் கல்வியைக் கொண்டுவருவதற்காக முயற்சிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவையும்கூட.

(லயோலா கல்லூரி நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)