Sunday, May 3, 2009

போர் நிறுத்தம் - உண்மை என்ன?

இலங்கை இனச்சிக்கலில்... ஒன்றிரண்டு நாளிதழ், தொலைக்காட்சி தவிர அனைத்து ஊடகங்களும் கடந்த 28-4-2009 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் என்றே தலைப்பிட்டிருந்தன.
இதனால் அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் என அறிவிக்கவில்லை என்றும், ஊடகங்கள் தவறாகத் திரித்துக் கூறுவதாகவும் தெரிவித்தார். இதில் எது எண்மை? யார் திரித்துப் பேசுவது?
ஊடக இயல்பை இங்கு பார்க்கலாம்.

Cessation of Hostilities, Ceasefire இந்த இரண்டு சொல்லையும் போர் நிறுத்தம் என்றே தமிழ் ஊடகங்கள் மொழிபெயர்க்கின்றன.
Cessation of Hostilities என்பது போரில் முன்னிலை வகிக்கும் தரப்பு... தாக்குதலின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். இன்று போய் நாளை என்பது போல...

Ceasefire என்பது இரண்டு தரப்பும் போரை நிறுத்தி அமைதிப் பேச்சில் ஈடுபடுவதாகும். இதைத்தான் போர் நிறுத்தம் என்கின்றனர்.
உலகத் தமிழர்கள் வலியுறுத்துவதும் இதைத்தான்.
இதனை இந்திய அரசு வலியுறுத்த மறுத்துவிட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இரண்டையும் ஏற்க மறுத்துவிட்டார். - கனரக ஆயுதங்கள், வான்படையின் கொடூரத் தாக்குதல்கள் இனி இடம்பெறாது - ஏனென்றால், எங்கள் இலக்கை (அழித்து ஒழிப்பது) அடைந்துவிட்டோம் - என்று ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்கு முன்வந்தால், இனச்சிக்கலை அரசியல் அடிப்படையில் தீர்க்க முனைவதாக கருதலாம். இல்லாவிடில் இன அழிப்பை தொடருவதாகவே பொருள் கொள்ள முடியும்.

Cessation of Hostilities, Ceasefire, கனரக ஆயுதக் குறைப்பு - இம்மூன்றுக்கும் - போர் நிறுத்தம்- என்ற ஒற்றைச் சொல் எப்படிப் பொருந்தும்?
இதனால் தான் இலங்கை அரசு - தாங்கள் சொல்லாத்தைச் சொன்னதாக ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக - விமர்சித்துள்ளது.

ஆம்., அரசியல் சொல்லாடல்களில், சொற்களுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதால்... அரசியலில் தான் எத்தனை நாடகங்கள்...
எத்தனை ஏமாற்றுகள்...

ஊடகத்துறையினரின் சொல் வறட்சியால் இந்த நாடகத்திற்குத் துணை போகலாமா?