Wednesday, March 31, 2010

பொய் விஞ்ஞானிகளும்
சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்


இந்துத்துவா பரிவாரங்களின் மோசடிகள் - அது வரலாற்றைத் திரிப்பது முதல் இன்றைய அறிவியலைத் திரிப்பது வரை- பலமுறை அம்பலமாகி இருக்கிறது. தற்போது இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக காட்டுவதற்காக இவர்கள் இறக்கிவிட்ட மோசடி விஞ்ஞானியும் அம்பலப்பட்டு நிற்கிறார். பிரதமர் அலுவலகத்தின் விண்வெளித் துறையில் கூடுதல் செயலாளராக வேலை செய்வதாக மோசடி செய்து திரிந்த புனீஸ்தனேஜா என்ற இந்தப் புளுகனை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. இந்த மோசடிப் பேர்வழி மீது இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரை இங்கு பிழிந்து தரப்படுகிறது.

நியூடெல்லி ஜூன்16: சேதுக் கால்வாய் திட்டப் பணிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாதங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வைத்து வந்த 'விண் வெளி விஞ்ஞானி' ஒரு மோசடிப் பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலுரித்துக் காட்டியபின் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்., வேறுவழியின்றி தனது அமைப் பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜாவை 'நீக்கியுள்ளதாக' அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி ஆள் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொய்யர் புனீஸ்தனேஜா தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்ட வர். மேலும் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்டுத்தி உள்ளது.
(இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டையின் படம் உள்ளது.)
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் 'இஸ்ரோ'வில் பணியாற்றுவதாகவும் இரண்டு ஆண்டு பணி விடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற பொய் ஆவணங்களுடன் பல பேரை ஆர்.எஸ்.எஸ். இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜாவின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பி யிருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர். கடந்த 2005 ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக நொய்டா நகரில் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (இஸ்ரோ) மேலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'இஸ்ரோ வுக்கும் மேற்படி ஆளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை. விண்வெளி ஆய்வுத் துறையின் கூடுதல் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. எஸ்.வி. ரெங்கநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களூரில் உள்ளார். சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கும் இஸ்ரோவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் புனீஸ் தனேஜாவின் வீட்டைக் கண்டுபிடித்து, அவரி டம், "பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்?" என்று கேட்ட போது, "அவ்வாறு நடந்துகொண்டதில்லை" என மேலும் ஒரு பொய்யைச் சொல்லிய புனீஸ்தனேஜா, தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கதைவிட்டார்.
"ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள்" என்று கூறிய புனீஸ்தனேஜா, "அசோக் சிங்காலுடன் சென்று, சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே மக்கள் மன்றத்திற்கு முதன்முதலாக வந்தேன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவனிடம் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டிருப்பதாவும்" தெரிவித்தார். மேலும் தான் விஞ்ஞானியே கிடையாது என்றும், சேதுக் கால்வாய் பற்றிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும் கூறிய புனீஸ்தனேஜாவிடம், அவரின் கல்வித் தகுதியைப் பற்றிக் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புனீஸ் தனேஜா விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் என்று எதுவும் கிடையாது என அரசு அளித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக் கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் விசுவ இந்து பரிஷத்தும் ஆர்.எஸ்.எஸூம் மத்திய அரசை வலியுறுத்தியும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு புனீஸ்த னேஜா பற்றி கேட்டபோது, "அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்" என்பதை ஒப்புக்கொண்டார். புனீஸ்தனேஜா செய்த மோசடி பற்றிக் கேட்டதற்கு "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அந்தப் புகார்கள் அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர் பதவியிலிருந்து நீக்கத் தகுந்தவை என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்" என்றார்.

சேது கல்வாய் திட்டப்பணி என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையி லுள்ள பெருங்கடலில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் வகையில் ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் நீங்கிவிடும். மேலும் 30மணி நேரப் பயணமும் குறைந்துவிடும்.

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக் கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் 'விஇப' வும் ஆர்.எஸ்.எஸூம் கோருகிறது. மேலும் இதை உலகக் கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகி றது.

புவியியல் ஆய்வின்படி சேது சமுத்திரத்தில் உள்ள மணல் மேடுகள் (ராமர் பாலம்) மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே. இப் படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான படிவுகள், அல்லது மணல் திட்டுகள் எனப்படும்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

மணல் திட்டு பாலம் ஆனது எப்படி?

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், சேது கால்வாய் திட்டப் பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் போது, இந்த ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் வழக்குப்போட்டு பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகள் புரளியை கிளப்பிக் கொண்டுள்ளன.
கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல் இதுதான் ராமர் கட்டிய பாலம் என்று மத வாத அமைப்புகள் கூறி வருகின்றன. புராணத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரமும் இன்றி சிக்கலை உருவாக்கிய இந்து மதவாத அமைப்புகள் நாடாளுமன்றத்திலும் இதைக் கிளப்பி 'முக்கிய' சிக்கலாக்கியுள்ளன.
இந்த சிக்கலை ஆராயப்புகும் முன் தமிழகத்தையும், இலங்கைத் தீவையும் இணைக்கும் கடலில் மூழ்கியுள்ள இந்த மணல் திட்டுகள் மனிதரால் உருவாக்கப்பட்ட பாலம்தானா என்பதை ஆராய வேண்டும்.
புவியியல், இயற்பியல் படித்த மாணவர்கள் பெரும் நிலப் பகுதிகளை ஒட்டி அதனை இணைத்திடும் மணல் திட்டுக்கள் அமைந்திருப்பது குறித்துப் படித்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் மெல்லியதாய் இணைக்கும் நிலப்பகுதியே இன்றைக்கு பனாமா நாடு என்று குறிக்கப்பட்டிருப்பதை உலக வரைபடங்களில் பார்க்கலாம். இந்த பனாமா நாட்டிற்கு இடையே தான் பனாமா கால்வாய் (நீர் வழி) வெட்டப்பட்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலிற்குச் செல்லும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பனாமா கால்வாய் மட்டும் இல்லாமல் போனால், பசுபிக் கரையோரப் பகுதியில் உள்ள அமெரிக்க துறைமுகங்களில் இருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், அதாவது அட்லாண்டிக் கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல வேண்டுமானால் தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் சென்றிருக்க வேண்டும். இதற்காக பல்லாயிரம் மைல்கள் கூடுதலாகப் பயணம் சென்றிருக்க வேண்டும். இதனைத் தவிர்ப்பதற்காகவே பனாமா நீர் வழி வெட்டப்பட்டு கப்பல்களின் பயண தூரமும், நேரமும் குறைக்கப்பட்டது.
இப்படி இரண்டு பெரிய கண்டங்களை அல்லது நிலப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியைத்தான் புவியியலிலும், இயற்பியலிலும் இஸ்த்மஸ் (Isthmus) என்று அழைப்பார்கள். இப்படி இஸ்த்மஸ் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதிகள் உலகில் ஏராளம் உள்ளன. அவை கடலில் மூழ்கியோ அல்லது சற்று மேலே நிலத் திட்டுக்களாகவோ அல் லது ஒன்றிணைந்து கோர்வையான தீவுகளாகவோ அமைந்திருக்கும்.

பனாமா போலவே, மற்றொரு நீர் வழி சூயஸ் கால்வாய் ஆகும். மத்தியத் தரைக் கடலையும், செங்கடலையும் இந்த நீர் வழி இணைக்கிறது. இந்தக் கால்வாய் ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்பிரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியில் உள்ள மணல் திட்டுகளை வெட்டி உருவாக்கப்பட்டதே இந்த சூயஸ் கால்வாய்.

நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள ஆக்லாண்டு தீவின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியில் உள்ள கிரேட்டர் ஆக்லாண்டுடன் இணைக்கும் பகுதியும் குறுகிய மணல் திட்டு தான். அதுவும் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டு.

கனடா நாட்டில் நியூ பவுண்ட்லாந்து என்றழைக்கப்படும் தீவுப் பகுதியை கனடா நாட்டுடன் இணைப்பதும் இப்படிப்பட்ட குறுகிய மணல் திட்டுதான்.

பாக்லாந்துப் போர் நினைவிருக்கும். அர்ஜெண்டினாவின் கடல் பகுதியில் உள்ள இந்தத் தீவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியில் உள்ள தீவு இதுபோன்ற மணல் திட்டுகளால்தான் இணைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியாவுடன் புரூனி தீவுகளை குறுகிய மணல் திட்டுகளே இணைக்கிறது. அதன் மீதும் ஒரு நீர் வழி உள்ளது.

இப்படி பெரும் நிலப்பகுதிகளுடன் சிறிய நிலப்பகுதிகளை இணைக்கும் மணல் திட்டுகள் உலகில் ஏராளம் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் மணல் திட்டு.

இது பாலம் அல்ல.

அப்படியென்றால், இந்த மணல் திட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டது?

இன்று தனித்தனி கண்டங்களாகப் பிரிந்துள்ள நமது புவியின் நிலப்பகுதி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக இருந்தது. புவியின் மையப் பகுதியில் அதிக வெப்ப நிலையிலுள்ள நெருப்புக் குழம்பு இறுகத் தொடங்கியது. இதனால் புவியின் மேற்பகுதி சுருங்கியது. இதன் விளைவாக ஒன்றாக இருந்த புவியின் மேற்பகுதி பலவாறாகப் பிளந்து நகரத் தொடங்கின. இதனைத்தான் கண்டங்களின் விலகல் (காண்டினெண்டல் டிரிஃப்ட்) என்று கூறுவார்கள்.

நிலநடுக்கம் என்பதே, பெரும் கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் தாங்கி நிற்கும் புவிப் பரப்பின் பெரும்பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும், ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வதனாலும் ஏற்ப டும் நிகழ்வுகளே.

இவ்வாறு ஒன்றாய் இருந்த புவியின் மேற்பகுதி, பெரும் நிலப்பகுதிகளாக (கண்டங்கள்) தனித்தனியாகப் பிரிந்து விலகியபோது, விலகிய அப்பகுதிகளுக்கு இடையே இருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகளின் முனைகள்தான் இப்படி இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே தெரியும் மணல் திட்டுகள் அல்லது நிலத் திட்டுக்கள் ஆகும்.
இதுபோன்ற புவியியல் மாற்றங்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு (2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் சுமத்ரா தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானதுபோன்று) சில நிலப்பகுதிகள் கடலால் அரிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற பெரும் கடற்பேரழிவுகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதை புவியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.

இன்றைய தமிழ்நாடும், இலங்கைத் தீவும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதியே. மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல்கோளும் ஏற்பட்டதால் பிரிந்ததே இன்றைய இலங்கை என்பதும் புவியியலாளர்கள் தரும் விளக்கம்.
இந்த கடல்கோள்களால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடலில் தீவுகளாகவும், மணல் திட்டுக்களாகவும் உள்ளன.

இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போன இந்த நிலப்பகுதியை ராமர் பாலம் என்று கூறுவது ஏமாற்று வேலையாகும்.

நாசா நிறுவனம் இந்த நிலப்பகுதியை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும் வரை, இதே மதவாதிகள் என்ன கூறிக்கொண்டிருந்தார்கள்?
ராமேஸ்வரத்தின் கோயில் ஒன்றின் தொட்டியில் மிதக்கும் கல் இருந்தது. இதைக்காட்டி, இதுபோன்ற கற்களைக் கொண்டு தான், ராமன் கடல் கடந்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டான் என்றனர். இந்தக் கதையை ராமேஸ்வரம் சென்று வந்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்.
நாசா செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும்வரை ராமர், பாலம் அமைத்த கதை இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. நாசா நிறுவனத்தின் ஒளிப்படத்தைக் கண்ட வுடன் இந்து மதவாதிகள் புதிய பாலத்தைக் கண்டுபிடித்துவிட்டனர்.

இப்புவியின் தோற்றம் முதல் அதன் பரிணாம வளர்ச்சி வரை ஒவ்வொரு கட்டத் தையும் ஆய்ந்து அதற்கான ஆதாரங்களைத் தேடிப்பிடித்து, அறிவியல் உலகம் ஒவ்வொரு உண்மையாக மெய்ப்பித்து வருகிறது. தனது முடிவிற்கான ஆதாரத்தையும் மக்கள் முன் வைக்கிறது. அறிவியல் இப்படி தேடிப் புலப்படுத்திய ஒரு இயற்கை உண்மையை, தனது இதிகாச, புராணக் கதைக்கு ஆதாரமாகக் காட்டி மக்களைப் பழமைக்குள் மூழ்கடிக்க முயன்றுள்ளனர்.

தமிழர்கள் இதுபோன்ற மணல் திட்டுகளை திட்டு என்றுதான் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். (பாலம் என்பது தவறு.) கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அருகில் எம்.ஜி.ஆர் திட்டு என்று ஒன்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு சுழற்றியடித்த ஆழிப்பேரலையில்(சுனாமி) எம்.ஜி.ஆர் திட்டில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. பாண்டிச்சேரிக்கு அருகில் தேங்காய் திட்டு உள்ளது. இப்படிக் கடலில் அமிழ்ந்தும் அமிழாமலும் இருக்கும் பகுதிகளுக்கு தமிழர்கள் வைத்துள்ள பெயர்தான் திட்டு. கடலுக்குள் திட்டுத் திட்டாகத் தெரிவதால் திட்டு என்றனர்.
பன்னெடுங்காலத்திற்கு முன் ஆழிப் பேரலையின்(சுனாமி) தாக்குதலில் இந்தியப் பெருங்கடலுக்குள் அமிழ்ந்துபோன குமரிக் கண்டம் பற்றி அறிந்துரைத்தார் பாவாணர்.

இந்தப் பாவாணரின் பெயரில் பாக் நீரிணையில் உள்ள மணல் திட்டுப் பகுதிகளை அழைத்திடவேண்டும்.

ஆங்கிலேயர் வைத்த ஆதம் பாலம் என்ற பெயரை நாம் அப்படியே அழைப்பது அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு. ராமர் பாலம் என்றழைப்பது இல்லாத ஒன்றை, பொய்யை மெய்யாக ஏற்றுக் கொள்வதாகும். இதனால் தமிழர்களின் வரலாற்றோடும், இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு தமிழ் மொழியில் இருக்கும் சொல் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பாவாணர் திட்டு என்று பெயரிடவேண்டும்.

தமிழக அரசு-அதுவும் இச்சிக்கலில் ஆர்வமுடன் தமிழர் நலன் பக்கம் நின்று பேசி வரும் முதல்வர் உடனடியாக பாவாணர் திட்டு எனப் பெயர் மாற்றம் செய்திட வேண்டும். மெட்ராஸ்- சென்னை ஆனதுபோல, பெங்களூர் - பெங்களூரு என்றானதுபோல, ஆதம் பாலம்- பாவாணர் திட்டு ஆக அறிவித்திட வேண்டும். இதனை அரசிதழில் (கெஜட்) வெளியிட்டு உடனடியாக நடை முறைக்குக் கொண்டு வரவேண்டும்.
- மணிமாறன்