Thursday, February 24, 2011

குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள்!

குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டு தமிழகத்திலும், டெல்லி அரசியலிலும் அதிகரித்து வருகிறது. தந்தை பெரியார் குடும்பமாக அரசியலுக்கு வாருங்கள் என்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்றுப் போராடினர். ரசியப் புரட்சியில் குழந்தை குட்டிகளுடன் அனைவரும் போர்க்களத்தில் குதித்தனர். சீனாவைப் புரட்டிப்போட்ட எழுச்சியில் அனைத்துக் குடும்பங்களும் பங்கேற்றன.

குடும்பம் குடும்பமாக அனைவரும் பங்கேற்காத எந்தப் போராட்டத்தின் வெற்றியையும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. எந்தத் தலைவனும் நினைத்துப் பார்த்ததில்லை. அண்மையில் வெடித்த எகிப்து கிளர்ச்சியிலும்கூட இப்படித்தான் அனைவரும் பங்கேற்றனர்.

இப்படி எல்லாம் குடும்பமாக பங்கேற்க சொல்லிவிட்டு, தம்முடைய குடும்பத்தை மட்டும் எதிர்க்கிறார்களே நியாயமா என முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அங்கலாய்க்கிறார். உண்மைதானே பிறகு எதற்கு இந்த எதிர்ப்பு...

அரசியல், ஊடகத்தொழில், திரைப்படத்தொழில் இப்படி பல்வேறு தொழில்களில் மு.கருணாநிதியின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளனர். எந்தத் தொலைக்காட்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், “சுமங்கலி” நிறுவனத்தின் ஆசி வேண்டும். திரையரங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள சன் பிக்சர்ஸ், கிளவுட் நயன்ஸ், ரெட் ஜெயன்ட்ஸ்... போன்ற நிறுவனங்களின் அருளாசி இருந்தால்தான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியும். தி.மு.க. கட்சியில் முன்னேற ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி, செல்வி, ராசாத்தியம்மாள் இப்படி யாராவது ஒருவரின் அங்கீகாரம்(?)வேண்டும்.

கிராணைட், ரியல் எஸ்டேட் என எந்தத்தொழிலும் கால் பதிக்க, முன்னேற இவர்களின் ஆசீர்வாதம் அவசியம் இருந்தாகவேண்டும். இந்த நிலைமைதான் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சுதந்திர இந்தியாவில் அரசியல், ஊடகம், திரைப்படத்துறை என எந்தத்தொழிலிலும் அனைவரும் ஈடுபடலாம்... திறந்தபோட்டி, சுதந்திர வாய்ப்பு என 1947 ஆகஸ்ட் 15 பெற்றுத்தந்த இந்த உரிமைதான் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் முடக்கப்படுகிறது. அதுவும் ஒரே ஒரு குடும்பத்திற்காக இவை அனைத்தும் முடக்கப்படுகிறது.

தி.மு.க. கழகமே குடும்பம் என அண்ணாத்துரை அனைவரையும் அரவணைத்துச் சென்றார். ஆனால் குடும்பமே கழகம் என அதனை மாற்றிவிட்டார் ‘தமிழினத் தலைவர்’. ஆட்சி, அதிகாரம் என்பது ஒரே குடும்பத்தின் நலனுக்கு உட்பட்டதாக மாறும்போதுதான் அனைவருக்குமான வாய்ப்பு முடக்கப்படுகிறது.

மன்னராட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் உருவாக்கித்தந்த சமவாய்ப்பு முடக்கப்படுவதுதான் இன்றைய பிரச்சனையின் வேர்.. ஜனநாயகத்தின் இந்த மாண்பு பறிக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்? எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இதுபோன்ற நிலையை ஏற்படுத்தியதால் என்ன ஆனார் என்பதை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியுமா? அந்த நிலை இங்கும்வர குடும்பம் குடும்பமாக மக்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். வருவார்கள்...

Sunday, February 20, 2011

ஸ்பெக்ட்ரமும், ஆரிய - திராவிடப்போரும்(?)

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மேலும் மேலும் ஆதாரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடுவண் புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கைப்பற்றிய ஆதாரங்கள் என ஒன்றிரண்டும் வெளியாகியுள்ளன. இவையே அதிரவைக்கும் படியானதாக உள்ளன. ஆனால் “இப்போதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது, விசாரணை முடிவுக்கு ஏற்ப தி.மு.க. முடிவெடுக்கும்” என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்.

“தற்போது நடப்பது ஆரிய – திராவிடப் போர், 1972 ஆம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிடப் போர் என்றார். ஆனால் தற்போது அரசியல் ரீதியாக இந்தப் போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது” இவ்வாறு வேலூர் கோட்டைத் திடலில் கருணாநிதி முழங்கியுள்ளார். (28-10-2010)

உண்மையில் நடப்பது ஆரிய, திராவிடப் போர் தானா?

இந்தியப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க, தலைமையிலான தேசிய முற்போக்குக்கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 ஐக்கிய முற்போக்குக்கூட்டணி-2 இவற்றில் தொடர்ந்து தி.மு.க. இடம்பெற்றுவருகிறது. அப்பொழுது ஆரியர்கள் யார்? திராவிடர்கள் யார் என்பது தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் என்பது கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றுக்குப் பயன்படும் அலைவரிசை தொழில்நுட்பம். உலக அளவிலான தொழில் வளர்ச்சி, செயற்கைக்கோள், அலைக்கற்றை நுட்பம், கைப்பேசி கருவிகளின் எளிமைப்பாடு போன்றவை புதிதாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கொரியா தைவான் சீனா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த / அடைந்துவரும் நாடுகள் இவற்றிலும் முன்னணியில் உள்ளன. பொருளாதார மேதை(?) என்றழைக்கப்பட்ட மன்மோகன்சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கை இவற்றுக்கு எல்லாம் வழியைத் திறந்துவிட்டுள்ளது.

திராவிடர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களும்... நரிக்குறவர், பழங்குடியினர் என எவரும் இந்த தொழில்நுட்பங்களின் விளைவுகளான கைப்பேசியையோ, தொலைக்காட்சி போன்றவற்றையோ பயன்படுத்தலாம். இதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருவதற்கு பொதுத்துறையில் உள்ள பி.எஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு உள்ளது.

இவற்றைச் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக நடுவண் அரசின் அங்கமான கணக்கு தணிக்கைத்துறை சொல்கிறது. பல கோடி கையாடல் நடந்திருப்பதாக மற்றொரு அங்கமான நடுவண் புலனாய்வு அமைப்பு கூறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு(?) வாய் திறந்த பிரதமர் மன்மோகன் “ தன்னுடைய வழிகாட்டுதல்களை அமைச்சராக இருந்த ஆ.ராசா பின்பற்றவில்லை” “கூட்டணி நிர்பந்தம் தன்னால் எதுவும் செய்யமுடியாது” என்று கூறுகிறார்.

உச்சநீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறது. அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள், என அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இவை எல்லாம் நடுவண் அரசின் அங்கங்கள் வெளிப்படுத்தியிருப்பவை... இதில் யார் திராவிடர்? யார் ஆரியர்? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க. அமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என அதன் அங்கங்களாக இருக்கும் அமைப்புகளே கூறும்போது நம்மால் யார் திராவிடர்? யார் ஆரியர்? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனை பா.ஜ.கவும், சாமிகளும் வெளியில் எடுத்துச்சொல்லுகிறார்கள். அரசியல் பண்ணக் காத்திருந்த ஜெயலலிதா எடுத்துப்பேசுகிறார். இதனால் அரசியல் ரீதியில் ஆரிய, திராவிடப் போர் நடக்கிறது என்று சொல்லுவது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக கூறுவது போன்றதாகும்.

திராவிடர்களின் உரிமைப் போர், தீண்டாமை கொடுமைக்குள்ளாகி இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், முடக்கப்படும் தமிழ் உணர்வுகள், முகாம்களுக்கும் சிறைப்பட்டுத்தவிக்கும் ஈழத்தமிழனின் அரசியல் உரிமைப் போர்... மாநிலங்களின் உரிமைக்கோரிக்கை, பறிக்கப்படும் ஆற்று நீர் உரிமைகள் என திராவிடத் தமிழனின்(?) இன்னல்கள் ஏராளம். இவற்றுக்கு எல்லாம் குரல் கொடுத்தா திகார் சிறையில் ஆ.ராசா அடைபட்டிருக்கிறார்.

கருணாநிதி குடும்பமும், தி.மு.க.வில் உள்ள ஒரு சிலரும் செல்வத்தில் செழித்து மகிழ நடத்தப்பட்ட இந்த முறைகேடு அம்பலமாகி நிற்கும்போது, கருணாநிதி கூறும் ஆரிய, திராவிடப் போர் என்பதை நம்பி பின்னால் ஓடி வர 50, 60 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்கள் போல் இப்போதும் ஏமாற வேண்டுமா?

(ஸ்பெக்ட்ரம் முறைகேடு... ஊழல்... உண்மை முகம்... அடுத்து...)