Saturday, April 14, 2007

மூளை-எந்திரம் இணைப்புக்கான இடைமுகம் (Brain Machine Interfaces)

மூளை-எந்திரம் இணைப்புக்கான இடைமுகம் (Brain Machine Interfaces)
நாம் ஒரு வேலையைச் செய்யும்போது நம்முடைய மூளைக்குள் என்ன மாதிரியான மின்குறியீடுகள்(சிக்னல்கள்) பரிமாறப்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வது, அடுத்து அதே முறையில் மனித மூளைக்கும், எந்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி, மூளையில் நினைத்தவுடன், தானாக வெளியில் உள்ள கணிப்பொறியோ, எந்திரமோ செய்திட வேண்டும். இது பற்றிய ஆராய்ச்சிக்கு மூளை-எந்திரம் இணைப்புக்கான இடைமுகம் (Brain Machine Interfaces) என்கின்றனர். இதுபற்றி ஆராயும் ஒரு சில அறிவியலார்களில் ஒருவர் மிகுவெல் நிகோலலிஸ்.
மனித மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்து அந்த அறிவைக்கொண்டு, மனித மூளைக்குள் வைக்கும் அளவுக்கு சில உள்ளீட்டுப்பொருள்களைத் (implants) தயாரித்து, அதன் மூலம் வெளியே இருக்கும் கணிப்பொறிகளையும் எந்திரங்களையும் இயக்குவது. இதெல்லாம் இந்த ஆராய்ச்சி மூலம் செய்யக்கூடியவை.
நிகோலலிஸ் இந்த அமைப்பை 'வீரியஒட்டு மூளை எந்திர இணைப்பு இடைமுகம் ' (Hybrid brain machine interfaces HBMI ) என்று சொல்கிறார்.
இன்னும் மூளையில் இருக்கும் கோடிக்கணக்கான நியூரான்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அந்த நியூரான்கள் எவ்வாறு செய்திகளை உற்பத்தி செய்கின்றன அவற்றை எப்படி மற்றவற்றுக்குத் தெரிவிக்கின்றன என்பது நிகோலலிஸ் போன்ற பல மூளை நரம்பியல் வல்லுநர்களுக்கு தெரியாது. எப்படி வண்ணங்கள் நியூரான்களால் அறிந்துகொள்ளப்படுகின்றன? வாசனைகள் எப்படி நியூரான்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன? என்பது எதுவும் தெரியாது.
'இப்படித்தான் மூளை இயங்குகிறது என்று சொல்லக்கூடிய மூளை பற்றிய முழுமையான வரைபடமோ விவரமோ நம்மிடம் இல்லை. உத்தேசமாக இங்கே இது நடக்கிறது என்பதே தெரிந்துள்ளது' என்கிறார் நிகோலலிஸ்.

No comments: