Monday, March 27, 2017

புராணப் புளுகை உண்மையாக்க முயற்சியா?

தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்றும், சேது கால்வாய் திட்டப் பணிகளுக்காக கடலை ஆழப்படுத்தும் போது, இந்த ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் வழக்குப்போட்டு பா... உள்ளிட்ட மதவாத அமைப்புகள் புரளியை கிளப்பின.
கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டுக்களின் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்ட நாள் முதல், இதுதான் ராமர் கட்டிய பாலம் என்றனர். தற்போது இந்திய அரசாட்சி பாஜகவிடம் இருப்பதால், இவற்றை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு அமைத்துள்ளனர். இந்தப் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா? இயற்கையானதா என்பதை அந்தக் குழு ஆய்வு செய்ய இருக்கிறது.

ஆதம் பாலம், ராமர் பாலம் என்றும் உள்ளூர் மக்களால் மணல் திட்டுகள் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

புவியியல், இயற்பியல் படித்த மாணவர்கள் பெரும் நிலப் பகுதிகளை ஒட்டி அதனை இணைத்திடும் மணல் திட்டுக்கள் அமைந்திருப்பது குறித்துப் படித்திருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்க கண்டத்தையும், வட அமெரிக்க கண்டத்தையும் மெல்லியதாய் இணைக்கும் நிலப்பகுதியே பனாமா நாடு என்று குறிக்கப்படுகிறது. இந்த பனாமா நாட்டிற்கு இடையே தான் பனாமா கால்வாய் (நீர் வழி) வெட்டப்பட்டு பசுபிக் பெருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலிற்குச் செல்லும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பனாமா கால்வாய் மட்டும் இல்லாமல் போனால், பசுபிக் கரையோரப் பகுதியில் உள்ள அமெரிக்க துறைமுகங்களில் இருந்து அந்நாட்டின் கிழக்குப் பகுதியில், அதாவது அட்லாண்டிக் கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக்கொண்டுதான் சென்றிருக்க வேண்டும். 

இப்படி இரண்டு பெரிய கண்டங்களை அல்லது நிலப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியைத்தான் புவியியலிலும், இயற்பியலிலும் இஸ்த்மஸ் (Isthmus) என்று அழைப்பார்கள். பெரும் நிலப்பகுதிகளுக்கு இடையிலான இதுபோன்ற குறுகிய நிலப்பகுதிகள் உலகில் ஏராளம் உள்ளன. அவை கடலில் மூழ்கியோ அல்லது சற்று மேலுயர்ந்த நிலத் திட்டுக்களாகவோ அல்லது ஒன்றிணைந்து கோர்வையான தீவுகளாகவோ அமைந்திருக்கும்.

பனாமா போலவே, மற்றொரு நீர் வழி சூயஸ் கால்வாய் ஆகும். மத்தியத் தரைக் கடலையும், செங்கடலையும் இந்த நீர் வழி இணைக்கிறது. இந்தக் கால்வாய் ஐரோப்பிய கண்டத்தையும், ஆப்பிரிக்கக் கண்டத்தையும் இணைக்கும் குறுகிய நிலப்பகுதியில் உள்ள மணல் திட்டுகளை வெட்டி உருவாக்கப்பட்டதே இந்த சூயஸ் கால்வாய்.

நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள ஆக்லாண்டு தீவின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியில் உள்ள கிரேட்டர் ஆக்லாண்டுடன் இணைக்கும் பகுதியும் குறுகிய மணல் திட்டு தான். அதுவும் கடலில் மூழ்கியுள்ள மணல் திட்டு.

கனடா நாட்டில் நியூ பவுண்ட்லாந்து என்றழைக்கப்படும் தீவுப் பகுதியை கனடா நாட்டுடன் இணைப்பதும் இப்படிப்பட்ட குறுகிய மணல் திட்டுதான். 

பாக்லாந்துப் போர் நினைவிருக்கும். அர்ஜெண்டினாவின் கடல் பகுதியில் உள்ள இந்தத் தீவின் கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியில் உள்ள தீவு இதுபோன்ற மணல் திட்டுகளால்தான் இணைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியாவுடன் புரூனி தீவுகளை குறுகிய மணல் திட்டுகளே இணைக்கிறது.

இப்படி பெரும் நிலப்பகுதிகளுடன் சிறிய நிலப்பகுதிகளை இணைக்கும் மணல் திட்டுகள் உலகில் ஏராளம் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் ராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் மணல் திட்டு. 

இது பாலம் அல்ல. 

அப்படியென்றால், இந்த மணல் திட்டுக்கள் எவ்வாறு ஏற்பட்டது?

இன்று தனித்தனி கண்டங்களாகப் பிரிந்துள்ள நமது புவியின் நிலப்பகுதி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக இருந்தது. புவியின் மையப் பகுதியில் அதிக வெப்ப நிலையிலுள்ள நெருப்புக் குழம்பு இறுகத் தொடங்கியது. இதனால் புவியின் மேற்பகுதி சுருங்கியது. இதன் விளைவாக ஒன்றாக இருந்த புவியின் மேற்பகுதி பலவாறாகப் பிளந்து நகரத் தொடங்கின. இதனைத்தான் கண்டங்களின் விலகல் (காண்டினெண்டல் டிரிஃப்ட்) என்று கூறுவார்கள். 

நிலநடுக்கம் என்பதே, பெரும் கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் தாங்கி நிற்கும் புவிப் பரப்பின் பெரும்பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதாலும், ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வதனாலும் ஏற்ப டும் நிகழ்வுகளே.

இவ்வாறு ஒன்றாய் இருந்த புவியின் மேற்பகுதி, பெரும் நிலப்பகுதிகளாக (கண்டங்கள்) தனித்தனியாகப் பிரிந்து விலகியபோது, விலகிய அப்பகுதிகளுக்கு இடையே இருந்த நிலப்பகுதிகள் கடலில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகளின் முனைகள்தான் இப்படி இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையே தெரியும் மணல் திட்டுகள் அல்லது நிலத் திட்டுக்கள் ஆகும்.
இதுபோன்ற புவியியல் மாற்றங்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு (2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் சுமத்ரா தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானதுபோன்று) சில நிலப்பகுதிகள் கடலால் அரிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற பெரும் கடற்பேரழிவுகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதை புவியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.

இன்றைய தமிழ்நாடும், இலங்கைத் தீவும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நிலப்பகுதியே. மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல்கோளும் ஏற்பட்டதால் பிரிந்ததே இன்றைய இலங்கை என்பதும் புவியியலாளர்கள் தரும் விளக்கம். 
இந்த கடல்கோள்களால் விழுங்கப்பட்ட நிலப்பரப்பின் சில பகுதிகளே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடலில் தீவுகளாகவும், மணல் திட்டுக்களாகவும் உள்ளன. 

இயற்கைச் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போன இந்த நிலப்பகுதியை ராமர் பாலம் என்று கூறுவது ஏமாற்று வேலையாகும்.

நாசா நிறுவனம் இந்த நிலப்பகுதியை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும் வரை, இதே மதவாதிகள் என்ன கூறிக்கொண்டிருந்தார்கள்? 
ராமேஸ்வரத்தின் கோயில் ஒன்றின் தொட்டியில் மிதக்கும் கல் இருந்தது. இதைக்காட்டி, இதுபோன்ற கற்களைக் கொண்டு தான், ராமன் கடல் கடந்து இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டான் என்றனர். இந்தக் கதையை ராமேஸ்வரம் சென்று வந்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். 
நாசா செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிடும்வரை ராமர், பாலம் அமைத்த கதை இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது. நாசா நிறுவனத்தின் ஒளிப்படத்தைக் கண்ட வுடன் இந்து மதவாதிகள் புதிய பாலத்தைக் கண்டுபிடித்துவிட்டனர். 

இப்புவியின் தோற்றம் முதல் அதன் பரிணாம வளர்ச்சி வரை ஒவ்வொரு கட்டத் தையும் ஆய்ந்து அதற்கான ஆதாரங்களைத் தேடிப்பிடித்து, அறிவியல் உலகம் ஒவ்வொரு உண்மையாக மெய்ப்பித்து வருகிறது. தனது முடிவிற்கான ஆதாரத்தையும் மக்கள் முன் வைக்கிறது. அறிவியல் இப்படி தேடிப் புலப்படுத்திய ஒரு இயற்கை உண்மையை, தனது இதிகாச, புராணக் கதைக்கு ஆதாரமாகக் காட்டி மக்களைப் பழமைக்குள் மூழ்கடிக்க முயல்கின்றனர்.

தமிழர்கள் இதுபோன்ற பகுதிகளை மணல் திட்டு என்றுதான் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். ( ஆங்கிலத்தில் பிரிட்ஜ் என்பதை இந்த இடத்தில் பாலம் என மொழிபெயர்ப்பது தவறு.) கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அருகில் எம்.ஜி.ஆர் திட்டு உள்ளது. 2004 ஆம் ஆண்டு சுழற்றியடித்த ஆழிப்பேரலையில் (சுனாமி) எம்.ஜி.ஆர் திட்டில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. பாண்டிச்சேரிக்கு அருகே தேங்காய் திட்டு உள்ளது.

இப்படிக் கடலில் அமிழ்ந்தும் அமிழாமலும் இருக்கும் பகுதிகளுக்கு தமிழர்கள் வைத்துள்ள பெயர்தான் மணல் திட்டு. கடலுக்குள் திட்டுத் திட்டாகத் தெரிவதால் திட்டு என்றனர். ஆங்கிலேயர் ஆதம் பிரிட்ஜ் என்று கூறியதை பாலம் என மொழிபெயர்த்துக்கொண்டு, இந்துத்துவ வாதிகள் கதை புணைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மதவாத புளுகை நிராகரிப்பதுடன், இதன் உண்மை இயல்பை மக்கள் எளிதாகப் புரியும் வகையில் பெயரை மாற்ற வேண்டும்.  

ஆங்கிலேயர் வைத்த ஆதம் பாலம் என்ற பெயரை நாம் அப்படியே அழைப்பது அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு. ராமர் பாலம் என்றழைப்பது இல்லாத ஒன்றை, பொய்யை மெய்யாக ஏற்றுக் கொள்வதாகும். இதனால் தமிழர்களின் வரலாற்றோடும், இதுபோன்ற இயற்கை அமைப்புகளுக்கு தமிழ் மொழியில் இருக்கும் சொல் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பாவாணர் திட்டு என்று பெயரிடவேண்டும். 


பன்னெடுங்காலத்திற்கு முன் ஆழிப் பேரலையின்(சுனாமி) தாக்குதலில் இந்தியப் பெருங்கடலுக்குள் அமிழ்ந்துபோன குமரிக் கண்டம் பற்றி அறிந்துரைத்தார் பாவாணர். இந்தப் பாவாணரின் பெயரில் பாக் நீரிணையில் உள்ள மணல் திட்டுப் பகுதிகளை அழைத்திடவேண்டும். 

-
மணிமாறன்

No comments: