Sunday, May 7, 2017

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்றால் என்ன?

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் இன்று தொடங்குவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

*அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில்* என்றால் என்ன?

வானிலையியல் துறையின் பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் இவை. ஜோதிடம், பஞ்சாங்கத்தில் மட்டுமே இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து பகுதிகளைக்கொண்டும், ராசி, கிரகம் அடிப்படையிலும் கணிப்பதாகும். இதில் பரணி நட்சத்திரம் முதல் கிருத்திகை நட்சத்திரம் வரையிலான சூரியனின் பயண காலத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்கின்றனர்.

இதுதொடர்பாக இன்னொரு புராணக் கதையும் உள்ளது. முன்னொரு காலத்தில் 12 ஆண்டுகள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்களாம். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி பகவானுக்கு மந்த நோய் ஏற்பட்டது. இதனால் உடம்பில் சேர்ந்த கொழுப்பை குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பை உண்ண வேண்டுமாம். இதற்காக அக்னி காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான். அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் வருணனிடம் முறையிட்டனர். ‘‘ அனைவரையும் காப்பாற்றுவதாக’’ வருணன் உறுதிமொழி அளித்தாராம். இதனையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் சென்று ‘‘காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான்’’ என முறையிட்டான். உடனே கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். பார்வையாலேயே புரிந்துகொண்ட அர்ச்சுனன், அம்புகளை சரமாரியாக எய்து காண்டவ வனத்தின் மீது எய்து கூடுபோல்(?) கட்டினான். உடனே அக்னி வனத்தை எரிக்கத் தொடங்கினான். அப்போது ‘‘உனக்கு 21 நாட்கள்தான் அவகாசம், அதற்குள் வனத்தை அழித்து பசியைத் தீர்த்துக்கொள்’’ என்றார். அதன்படி காண்டவ வனம் எரிக்கப்பட்ட 21 நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.    

இந்த ஜோதிட நம்பிக்கையை வானியல் ஏற்றுக்கொள்வதில்லை. ‘‘கத்தரி வெயில் என்பது 100 % வானிலையியல் துறை வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தில் மட்டும் பயன்படுத்தும் வார்த்தையாகும். ராசி, நட்சத்திர அடிப்படையில் வானிலையியல் துறை இயங்குவதில்லை. கோடை வெயில் மே மாதம் சுட்டெரிக்கும், கடற்காற்றின் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவை அதிகரிப்பதோ, குறைவதோ நிகழும்’’ என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த திரு.ரமணன் தெரிவித்தார்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் தொடங்கியது என ஊடங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிடுகின்றன. உண்மையில் வானிலை அறிவியலுக்கும் இதற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.

கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் என்று சொல்ல விரும்பினால்,  ஜோதிடத்தின் படி அல்லது பஞ்சாங்கத்தின் படி என்று குறிப்பிட்டுக்காட்டி பயன்படுத்தலாம். அறிவியலோ என மயக்கம் கொள்வதும், மக்களை மயங்கச்செ ய்வதையும் தவிர்க்க வேண்டும். 

மணிமாறன்
ஊடகவியலாளர்

1 comment:

ராஜி said...

அறியாத விடயம்